சேலம்: சேலம் நீதிமன்றத்தில் நீதிபதி பொன்பாண்டி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் அவரது அறைக்கு வந்து அமர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அலுவலக உதவியாளர் பிரகாஷ் (37) என்பவர் நீதிபதி அறைக்கு வந்து, இடமாறுதல் தொடர்பாகப் பேசியுள்ளார்.
இதற்கு நீதிபதி பொன்பாண்டி, இது குறித்து மாவட்ட நீதிபதியிடம் தெரிவிக்குமாறு தெரிவித்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அலுவலக உதவியாளர் பிரகாஷ் கையில் வைத்திருந்த கத்தியால் நீதிபதியைக் குத்தினார். இதில் அவரது இடது மார்பில் காயம் ஏற்பட்டது.
நீதிமன்ற ஊழியர்கள் உடனே நீதிபதியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். நீதிபதியைக் கத்தியால் குத்திய அலுவலக ஊழியர் பிரகாஷை மற்ற ஊழியர்கள் பிடித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.