சேலம் மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கம் அறிக்கை:
மத்திய பட்ஜெட் குறித்து சேலம் மாவட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பாதிப்புக்குப் பிறகு தாக்கலாகும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை சிறு, குறுந்தொழில் துறையினர் கொண்டிருந்தனர்.
கடந்த ஆண்டைவிட இந்தாண்டு இத்துறைக்கு இரட்டிப்பாக ரூ.15,700 கோடியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்தச் சலுகையும் அளிக்கப்படவில்லை.
பருத்திக்கு 10 விழுக்காடும், பட்டு துணிகளுக்கு 15 விழுக்காடும் கலால் வரியை உயர்த்தி இருப்பதால் ஒட்டுமொத்த ஜவுளித் துறையும் பாதிக்கப்படும். வருமான வரியிலிருந்து 75 வயதுடையோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேறு எந்த வருமான வரிச் சலுகையும் அளிக்கப்படவில்லை.
வங்கி முதலீட்டுக்கு இதுவரை காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சமாக இருந்ததை ரூ.5 லட்சமாக உயர்த்தி இருப்பது நல்ல நடவடிக்கையாகும். உற்பத்தியாளர்களுக்கு மானியமாக ரூ.1.97 லட்சம் கோடி, நகர்ப்புற தூய்மைத் திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி, உள்கட்டமைப்பு நிதிக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது" எனக் கூறப்பட்டுள்ளது.
சேலம் நகர அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பொதுச்செயலாளர் பேட்டி
இது குறித்து சேலம் நகர அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் கூறியதாவது, "மத்திய பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரி, வருமான வரித் திட்டத்தில் மக்களின் எதிர்பார்ப்பில் எந்தவித மாற்றமும் நிகழவில்லை. வங்கி, துறைமுகங்கள் தனியார்மயமாகும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
சுகாதாரத் திட்டங்களுக்கு வரவேற்பு அளிப்பதாக உள்ளது. சுகாதாரத் திட்டங்களின் முழுப்பயன் கிடைக்க வேண்டும். நாடு முழுவதும் 100 சைனிக் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
மதுரை-கொல்லம் சாலை வசதி மேம்படுத்தும் அறிவிப்பு இரு மாநில மக்களின் வேலைவாய்ப்பு, தொழில்வளம் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு ஈர்க்க முயற்சிப்பது நல்ல முயற்சி இல்லை. ஏற்கனவே சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்பு இருந்துவரும் நிலையில், தற்போதைய அறிவிப்பு நல்லது இல்லை.