சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த அப்பமசமுத்திரம் அருகே உள்ள ராமநாயகன் பாளையம் காரமடை திட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன். இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், பாஜகவின் இலக்கிய அணி சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு, இதற்காக பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விவசாயிகளுக்கு விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ஆத்தூர் காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குகளும் உள்ளன. இதற்கிடையே தான், இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை தரப்பில் இருந்து, விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் சாதி பெயருடன் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, இருவரும் சென்னைக்கு சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க அமலாக்கத்துறை அளித்த சம்மனில் விவசாயிகளின் சாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று மாலை (ஜன.01) சேலம் ஊரக டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் விவசாயிகளின் வீட்டிற்குச் சென்று இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரும்படியும் தெரிவித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.