சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது ஜெயம் காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகம். இந்த வணிக வளாகத்தில் இந்தியன் வங்கி ஏடிஎம் உள்ளது.
நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஏடிஎம் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் அங்குள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இது குறித்த வங்கி மேலாளர் சுந்தரத்திடம் அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வங்கி மேலாளர் சுந்தரம் அங்கு போதையில் அமர்ந்திருந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினார். மது போதையிலிருந்து இளைஞருக்கும் வங்கி மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே அந்த இளைஞர் அருகிலிருந்த கடைக்குச் சென்று குளிர்பான பாட்டிலை எடுத்துவந்து மேலாளர்களின் கையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதனையடுத்து காயமடைந்த மேலாளர் சுந்தரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். ஏடிஎம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் குடிபோதையில் மேலாளரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பான காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காரிப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கையூட்டு வாங்கிய துணை ஆட்சியர் கைது