தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு, வெங்காயத்தின் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. இந்நிலையில் வெங்காயத்திற்கு ஈடாக தற்போது பூண்டும் வரலாறு காணாத விலை உயர்வில் களம் இறங்கி இருக்கிறது.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் மற்றும் இமாச்சலப்பிரதேசம் போன்ற பகுதியில் பூண்டு விளைச்சல் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றத்துக்கு விளைச்சல் மற்றும் வரத்து குறைவுதான் காரணம் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பூண்டுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சேலம் லீ பஜார் மண்டி மற்றும் செவ்வாய்ப்பேட்டை, சத்திரம் பகுதிகளில் பூண்டு மொத்த விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கடந்த மாதம் வரை மாதத்திற்கு 20 லோடு பூண்டு மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. ஆனால், தற்போது மாதத்திற்கு 5 முதல் 8 லோடு மட்டுமே விற்பனைக்கு வருகிறது.