சேலம்:இன்று (செப்.20) காலை முதல் தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறையைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று (செப்.20) காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து. இதன் ஒரு பகுதியாக செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
இதை மையமாகக் கொண்டு நடைபெறும் சோதனைகளில் சேலம் அனல் மின்நிலையத்திலும் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு அலகுகள் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரங்கள், பராமரிப்பு பணி மற்றும் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பணிகளை சென்னையில் உள்ள ராதா இன்ஜினியரிங் கம்பெனி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த நிறுவனம் மீது வரி ஏய்ப்புகள் செய்ததாகவும், முறைகேடாக பணியாளர்களின் பணத்தை எடுத்ததாகவும் வருமான வரித்துறைக்கு பல புகார்கள் வந்தன. இதனையடுத்து இன்று காலை முதல் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஐந்து பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.