தென் தமிழ்நாட்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் "கிடா சண்டை" என்பது சேவல் சண்டையைப்போன்றே மிகச்சிறப்பு வாய்ந்த போட்டியாகாத கொண்டாடப்படுகிறது. ஆட்டுக் கிடாக்களின் வயதுக்கேற்ப போட்டியில் எதிரி ஆடு சேர்க்கப்படும். ஒரு குறிப்பிட்ட அளவு முட்டுக்கள் முட்டிக்கொண்ட பின்பும் ஆட்டுக்கிடாவில் ஒன்றும் தோற்கவில்லையெனில் கிடாக்கள் சமமான பலத்துடன் இருப்பதாக அறிவிப்பார்கள்.
ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், கிடா சண்டை போன்றவைக்கு கடந்த சில ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் வீரவிளையாட்டு என்பதால் ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு முழுவதும் மக்கள் நடத்திய போராட்டத்தால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டும், ரேக்ளா ரேஸும் மீண்டும் நடத்தப்படுகிறது. கிடாச்சண்டைக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் கிடா சண்டை பிரியர்கள் அவ்வப்போது காவல் துறையினருக்கு தெரியாமல் கிடா சண்டை நடத்துகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் அருகே கம்பம் கம்பம்மெட்டு ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் கிடா சண்டை பிரியர்கள் ஒன்று சேர்ந்து இன்று கிடா சண்டை போட்டியை நடத்தினர். அதனை காண்பதற்காக அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர்.
அனுமதியின்றி நடத்தப்பட்ட கிடா சண்டை போட்டி இதனையடுத்து கிடா முட்டு நடப்பது குறித்த தகவலறிந்த கம்பம் வடக்கு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் காவல் துறையினர் வருகையை அறிந்த கிடா சண்டை பிரியர்கள் ஆடுகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அந்த இடத்தை விட்டு பறந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலும் கிடா சண்டை போட்டி நடத்தாமல் இருப்பதற்கு காவல் துறையினர் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க...கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்...!