நிலுவைத் தொகைக்காக சொத்து ஜப்தி? கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கொந்தளிப்பு! சேலம்: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை கடந்த மாதம் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதனால், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆபரேட்டர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஒளிபரப்பைச் சீர்படுத்தக் கோரி, தமிழ்நாடு முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பிறகு நீதிமன்றம் தலையிட்டு ஒளிபரப்பு சேவையை சீர்படுத்த உத்தரவிட்டதை நிலையில், அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு சீரடைந்தது.
அரசு கேபிள் டிவி நிர்வாகம் வலியுறுத்துகிறதா?இதனிடையே, கேபிள் டிவி ஒளிபரப்பு செய்யப்படாத நாட்களுக்கும் சேர்த்து தற்பொழுது பணம் கட்ட அரசு கேபிள் டிவி நிர்வாகம் வலியுறுத்துவதாகக் கூறி, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீண்டும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று (டிச.12) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பில் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் 'அனலாக் நிலுவைத் தொகை'யை காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரை ஏவி மிரட்டி பணம் பறிக்கும் முறையை கைவிட வேண்டும்.
செய்வதறியாத ஆபரேட்டர்கள்: செயலாக்கம் இல்லாத செட்டாப் பாக்ஸ்ர்க்கும் பணம் கட்ட நிர்ப்பந்திக்கும் முறையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறுகையில், 'கடந்த மாதம் அரசு கேபிள் டிவி சேவை சரிவர ஒளிபரப்பு செய்யப்படாததால் கடுமையாக வாடிக்கையாளர்களுக்கும் எங்களுக்கும் பல்வேறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கும் சென்று விட்டார்கள். தற்போது உள்ள வாடிக்கையாளர்களைக் கொண்டு கேபிள் டிவி நடத்தி வருகிறோம். ஆனால் இந்த அரசு, அனலாக் தொகையை நிர்பந்தப்படுத்தி எங்களிடம் வசூலிக்கிறது.
ஜப்தி நடவடிக்கை எதற்கு? குறிப்பாக, கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை கொண்டு அச்சுறுத்துவதும் அவர்களின் பொருட்களை ஜப்தி செய்வதும் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை, அரசு கேபிள் டிவி நிறுவனம் செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு, இந்த விவகாரத்தில் தலையிட்டு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கையை ஏற்று அவர்களை பாதுகாத்திட வேண்டும்' என்று கூறினர்.
இதையும் படிங்க: அரசு கேபிள் டிவிக்கு தடையின்றி சிக்னல் வழங்க கோரி கேபிள் ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்