சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில், சக்கரை செட்டியப்பட்டி கிராமம் புதுக்கடை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அந்த இளைஞர்கள் பொதுமக்களிடம் தகராறு செய்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பொறியாளர் விஷ்ணுபிரியன் என்பவர் ஏதோ சத்தம் கேட்கிறதே என்று வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது ஒன்றும் அறியாத அந்த இளைஞரை, குடிபோதையிலிருந்த இளைஞர்கள் சிலர் தாக்கியும் கத்தியால் குத்தியும் உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த இளைஞர் விஷ்ணுபிரியன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து குடிபோதையில் தகராறு செய்த கும்பலில் ஒரு நபரை அப்பகுதி மக்கள் பிடித்து வைத்துக்கொண்டு, இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை நொறுக்கியும் சாலையில் கற்களை வைத்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இருபிரிவினரும் வெவ்வேறு சாதி என்பதால் சாதி கலவரம் நடக்காமலிருக்க 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து புதுக்கடை பகுதிக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தீபா காணிகர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆன பொறியாளர் விஷ்ணுபிரியன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பிடித்து கொடுத்த தமிழ்மணி என்பவரைக் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகர் குற்றவாளிகளை உடனே பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். புதுமாப்பிள்ளையை கத்தியால் குத்தி தலைமறைவாக உள்ள இளைஞர்களை ஓமலூர் காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க...மது பாட்டில் கடத்த முயன்று கையும் களவுமாக சிக்கிய சேல்ஸ்மேன்கள்!