வெள்ளி பட்டறை உரிமையாளரை தாக்கிய திமுக பிரமுகர் சேலம்:அம்மாபேட்டை, குலசேகர ஆழ்வார் தெரு பகுதியை சேர்ந்தவர் வெள்ளி பட்டறை உரிமையாளர் கண்ணன். இவர் வழக்கம்போல் இன்று காலை தன் வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் தனது வீட்டிற்குள் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திமுக பிரமுகர் ராஜா என்பவர் தனது இன்னோவா காரில் அந்த வழியாக வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தின் மீது அவரது கார் மோதியுள்ளது. சப்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த கண்ணன் கார் செல்வதற்கு ஏதுவாக இருசக்கர வாகனத்தை தள்ளி நிறுத்தி வழிவிட்டுள்ளார். அப்போது காரை ஓட்டி சென்ற ராஜா, ‘ஹாரண் அடிக்கிறேன் உனக்கு கேட்கவில்லையா, ஹாரன் அடிச்சா வெளியே வந்து பாரு' என்று அதட்டி கேட்டபடி காரை ஓட்டிச் சென்றார்.
இந்த நிலையில், வண்டி ஓரமாகத் தான் நிறுத்தி இருக்கிறேன். இப்படி சொல்லிவிட்டு போகிறார் என்று கூறி தனது தலையில் அடித்து கொண்டு மனம் நொந்து கண்ணன் வீட்டுக்குள் சென்றார். இதனை தனது காரின் சைட் மிரரில் பார்த்த ராஜா, காரை விட்டு இறங்கி வந்து, ‘என்னடா தலையில் அடிச்சுட்டு போற தொலைச்சிடுவேன்...' என்று கூறி கண்ணனின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.
ராஜாவின் தாக்குதலில் நிலை குலைந்த கண்ணன் மற்றும் அவரின் உறவினர்கள் செய்வது அறியாது திகைத்து நின்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருசக்கர வாகன உரிமையாளரை திமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "கருக்கலைப்பில் மைனர் பெண்ணின் தந்தை பெயர் அவசியமில்லை" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!