சேலம்:சேலம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில், இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார். அப்போது கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு ஐஜேகே நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதேநேரம் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கும் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், "ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களித்தால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். இதற்கான தேர்தல் பரப்புரை களத்தில் செய்தியாளர்கள் தாக்கப்படுவது கடும் கண்டனத்துக்குரியது” என்றார்.