சேலம் மாவட்டம் பாகல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சப்பாணி என்கிற அய்யந்துரை. இவர் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் பல திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் மீது சேலம், கோயம்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இதனிடையே திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையிலிருந்த அய்யந்துரை, 40 நாட்களுக்கு முன்னர் வெளிவந்துள்ளார். சிறையிலிருந்து வெளிவந்த இவர் சேலத்திலுள்ள பல்வேறு வீடுகளில் மீண்டும் திருடியுள்ளார்.
சேலத்தில் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து அடையாளம் தெரியாத நபர் திருட்டில் ஈடுபட்டதாக காவல்துறைக்கு தொடர்ந்து பல புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து கொள்ளையனைப் பிடிக்க மாநகர காவல் உதவி ஆணையாளர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கந்தம்பட்டி ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த அய்யந்துரையை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சேலத்தில் தொடர்ந்து வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்டது அய்யந்துரைதான் என்பது தெரியவந்தது.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட கொள்ளையன் இதையடுத்து அய்யந்துரையை கைது செய்து காவல் துறையினர் அவரிடன் விசாரணை நடத்தினர். அப்போது, ஒரு நாள் திருட செல்லவில்லை என்றாலும், திருட சென்ற இடத்தில் திருட முடியாமல் போனாலும் தனக்கு தூக்கம் வராது, மன உறுத்தலாக இருக்கும், மறு நாள் வேறு எங்கையாவது சென்று திருடினால்தான் தூக்கம் வரும் எனவும், கொள்ளையடிக்க செல்லும் வீட்டில் நாய் இருந்தால் அதற்கு சிக்கன் அல்லது முட்டை பொடி மாஸ் கொடுத்து கொள்ளையடிப்பேன் என அய்யந்துரை கூறியுள்ளார். இதைக் கேட்ட காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரிடமிருந்து, 6 இரு சக்கர வாகனம், 10 சவரன் தங்க நகை, ஒரு ஐம்பொன் முருகன் சிலை, 70 ஆயிரம் ரொக்க பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து, அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் பழக்கம்... 1 வாரத்தில் தனியாக அழைத்து வன்கொடுமை... பாய்ந்த போக்சோ
!