சேலம்: சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி காளியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த ஓராண்டிற்கு முன் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வெல்லமண்டியில் தர்மராஜ் வேலைபார்த்த போது அங்கு பணியாற்றி வந்த 20 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி வந்துள்ளனர்.
இந்த உறவு விவகாரம் இருவரது வீட்டிலும் தெரிந்து இருவரும் பேசக் கூடாது எனக் கூறி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று தர்மராஜ் தனது மனைவி தமிழரசிக்கு போன் செய்து தான் ஏற்காடு ரவுண்டானா பகுதியில் உள்ள லாட்ஜில் காதலியுடன் வந்து விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி தனது உறவினர்களுடன் ஏற்காட்டில் உள்ள விடுதிக்கு சென்று அவர்கள் தங்கியிருந்த அறையில் மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.