தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை கொன்ற கணவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: மனைவியைக் கொன்ற கணவருக்கு மூன்று ஆயுள் தண்டனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரின் கூட்டாளிகள் இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

Breaking News

By

Published : Sep 19, 2020, 4:00 AM IST

சேலம் மாவட்டம் வீராணம் அடுத்த பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தைத் தாண்டிய உறவு வைத்திருந்ததாகவும் அதனை கைவிட வேண்டும் என்று அவருடைய மனைவி ரெஜினா கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த ரமேஷ், மனைவி ரெஜினானாவை கடந்த 2014ஆம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பாக வீராணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ் மற்றும் அவரின் நண்பர்களை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு, நேற்று சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இறுதி விசாரணையை முடித்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதில், மனைவியை கொன்ற முதல் குற்றவாளி ரமேஷிற்கு மூன்று ஆயுள் தண்டனையும், 9 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

கொலைக்கு உடந்தையாக இருந்த அவரின் கூட்டாளிகள் மற்றொரு ரமேஷ் மற்றும் விமல்ராஜ் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து குற்றவாளிகளின் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதனர். இதனால் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து குற்றவாளிகள் மூன்று பேரும் பாதுகாப்புடன் சேலம் அரசு பொதுமருத்துவமனைக்கு கரோனா பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பரிசோதனைக்குப் பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படுவர் என்று அஸ்தம்பட்டி காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஸ்வப்னா சுரேஷுக்கு அக்டோபர் 8ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல்

ABOUT THE AUTHOR

...view details