வரலட்சுமி நோன்பு நாளை (ஜூலை31) கடைபிடிக்கப்பட இருப்பதால், மக்கள் பூ வாங்க மார்க்கெட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நாளில், வீட்டில் உள்ள கடவுளின் உருவப்படங்கள், சிலைகளை அலங்கரித்து நோன்பு கயிறு கட்டி பெண்கள் வணங்குவார்கள்.
அதன்படி, இன்று (ஜூலை30) சேலத்தில் உள்ள வ. உ. சி.பூ மார்க்கெட் பகுதியில் வரலட்சுமி விரத பண்டிகைக்காக ஏராளமான பொதுமக்கள் பூக்கள் வாங்க குவிந்தனர். பூக்களின் விலையும் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்திருந்தது.
குண்டுமல்லி ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. அரளிப்பூ கிலோ 40 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல், ஜாதிமல்லி உள்ளிட்ட அனைத்து வகையான மலர்களும் கிலோ 40 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
மேலும், மாநகராட்சி அலுவலர்களின் அறிவுறுத்தலை காற்றில் பறக்கவிட்டுட்டு தகுந்த இடைவெளியை பின்பற்றமால் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் பூ வாங்க குவிந்தனர்.
இதனால், சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.