சேலம்:விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ சாராயம் அருந்தியதில், இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த மணிவிழுந்தான் புதூரில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட லாரி டியூப்களில் பதுக்கப்பட்டு இருந்த கள்ளச்சாராய பாக்கெட்டுகளை மதுவிலக்கு காவல் துறையினர் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். மேலும், சேலம் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அங்கு இருந்து லாரி டியூப்கள் மூலம் கடத்தி வரப்பட்டு, ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்று வட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக காவல் துறையினரிடம் வீடியோ ஆதாரங்கள் உடன் பொதுமக்கள் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனிடையே, கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் தற்காலிக சோதனைச் சாவடி மற்றும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரிக்கரையில் அதிகாலை முதலே கள்ளச்சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.