சேலம்:மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச் உள்ள இடத்தை நில அளவீடு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், எல்லைக்கற்கள் நட்டு வைத்தனர். இதனிடையே நிலத்தின் உரிமையாளர் விஜயவர்மன், அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்றும், நில ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அந்த இடத்தை கொடுக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் கோட்ட பொறியாளர், மாடர்ன் தியேட்டர்ஸ் நிலம் அரசுக்குச் சொந்தமானது என அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சேலம் கன்னங்குறிச்சி கிராமம் புல எண்.17இல் அப்போதைய மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனமானது, அதன் நிறுவனர் டி.ஆர்.சுந்தரம் என்பவரால் 1935ஆம் ஆண்டு துவங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அந்த நிலம் நிறுவனத்தின் பங்குதாரர்களால் 1994இல் குமாரசாமி மற்றும் 10 நபர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது. கிரயம் பெற்றவர்களால் இப்புலமானது மனைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
இந்த மனைப் பிரிவுகளிலிருந்து பொன்னுசாமி வர்மா மகன் ரவிவர்மா என்பவர், 2004இல் 2.00 ஏக்கர் பரப்புள்ள மனை இடங்களை கிரயம் பெற்றுள்ளார். அவரது மகன் விஜயவர்மன் என்பவர், இந்த வீட்டு மனைப் பிரிவில் புல எண்.17/1ஏ1சி இல் 1,348 சதுர அடி நிலத்தினை, தனது தந்தை ரவிவர்மா என்பவரிடமிருந்து கடந்த 2023 மார்ச் 9-இல்தான் சென்டில்மென்ட் பெற்றார்.
இந்த இடம் மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவினையொட்டி கிழக்குப் புறமாக அமைந்துள்ளது. இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு கன்னங்குறிச்சி கிராமம் புல எண்.8-இல் சாலை புறம்போக்கில் அமைந்துள்ளது. இந்த புலம் சேலம் சந்திப்பு ஏற்காடு சாலையில் அமைந்துள்ளது. இச்சாலை ஏற்காடு நெடுஞ்சாலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.
இந்த இடத்தில் நெடுஞ்சாலையை ஒட்டிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான புல எண் 8இல் ஆர்.விஜயவர்மன் என்பவர் 2023 நவம்பர் 3ஆம் தேதி 20-க்கு 3 மீட்டர் பரப்பளவில் பேவர் பிளாக்குகளை அமைத்து கேட் நிறுவி, தனது நிலத்திற்கு பாதை அமைக்கும் வகையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.