சேலம் மாவட்டம் டவுன் பகுதியில் முள்ளுவாடிகேட் ரயில்வே பாதையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் பாலம் கட்டும் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. இதனால் முள்ளுவாடி கேட் பகுதியில் ஒரு வழிப்பாதையாக இருந்த மற்றொரு சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக ரயில் செல்லும் நேரங்களான காலை 8.30, நண்பகல் 1.30, இரவு ஒன்பது மணிக்கு எல்லாம் ரயில்வே கேட் அடைக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அதிகமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே, முள்ளுவாடி கேட் பகுதியை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்," மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்களை அண்ணாப் பூங்கா, சுந்தர் லாட்ஜ் வழியாக செல்ல மாற்றியமைத்தும், சுந்தர் லாட்ஜ் பகுதியிலிருந்து முள்ளுவாடி கேட் வழியே வாகனங்கள் டவுனுக்கு வரவும் வழிவகை செய்ய வேண்டும்.
ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் இதனால், முள்ளுவாடி கேட் ரயில் பாதை ஒரு வழிப் பாதையாக மாற்றினால், போக்குவரத்து நெரிசல் முற்றிலும் இல்லாமல் ஆகிவிடும். எனவே, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களை கருத்தில் கொண்டு, சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில்குமார், சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் இருவரும் இணைந்து முள்ளுவாடி கேட் பகுதியில் ஆய்வு செய்து, பாலப் பணிகள் முழுவதுமாக முடிவடையும் வரை, முள்ளுவாடி ரயில்வே பாதை ஒரு வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை - மதுரை மக்கள் வேதனை!