சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஜூன் 5) காலை சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் திடீரென ஆய்வுமேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்துவருகிறது. வரும் நாள்களில் நோய் பாதிப்பு மேலும் குறையும். தற்போது, 843 பேர் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கரோனா தொற்று பாதிக்காதவர்களுக்கும் கறுப்புப் பூஞ்சை நோய் ஏற்படும் என்பதை மக்கள் புரிந்துகொண்டு சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் அளவு ஆகியவற்றைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. குறிப்பாக சேலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையிலிருந்து கூடுதல் கட்டணத்தைத் திரும்பப் பெற்று நோயாளியிடம் அல்லது உறவினரிடம் இன்று மாலைக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் 95.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 42 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அடுத்த அலை வந்தாலும் அதிலிருந்து மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு எடுத்துவருகிறது" எனத் தெரிவித்தார்.