தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்: அதிமுக்கிய தீர்மானங்கள்...! - Vazhapadi Grama Sabha Meeting

சேலம்: குடியரசு தினத்தையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது மிக முக்கியத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

சேலம் கிராம சபைக் கூட்டம்  சேலத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்  வீராபாண்டி கிராம சபைக் கூட்டம்  வாழப்பாடி கிராம சபைக் கூட்டம்  Salem Grama Sabha Meeting  Veerapandi Grama Sabha Meeting  Vazhapadi Grama Sabha Meeting  Grama Sabha Meeting held in Salem
Grama Sabha Meeting held in Salem

By

Published : Jan 26, 2020, 11:49 PM IST

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில், சேலம் மாவட்டத்திலுள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அரசு நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என ஆண்டுதோறும் நான்கு முறை நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், நீர்முள்ளிக்குட்டை ஊராட்சியில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நீர்முள்ளிக்குட்டை ஊராட்சிமன்றத் தலைவர் சத்யா தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எஸ். சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலனுக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாகச் செயல்படுத்திவருகின்றார். இந்த கிராம சபைக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் கிராமப்புற மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் எடுத்துரைக்கப்படுகிறது.

மேலும், ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள் புதியதாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டப் பணிகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன. சேலம் மாவட்டத்திலுள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் இன்றைய தினம் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இக்கூட்டத்தில் 2019ஆம் ஆண்டிற்கான ஊராட்சிகளில் அக்டோபர் முதல் டிசம்பர் முடிய உள்ள மாதங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டு, திட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது.

குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்தும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி, விற்பனை தடைசெய்யப்பட்டது குறித்தும், திறந்தவெளி மலம் கழிக்கப்படாத ஊராட்சிகளாக அறிவித்தல் குறித்தும், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தும், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல் தெரிவித்தும், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை குறித்து எடுத்துரைத்தும், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையக் கழிப்பறைகள் பயன்படுத்தப்படுத்துவது குறித்து விவாதித்து, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராம வளர்ச்சித்திட்டம் குறித்து விவாதம் செய்தல், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், திட்ட அறிக்கை, முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2019-20, பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் திட்ட அறிக்கை முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.

அனைத்து கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பிறந்த 1 மணி நேரம் முதல் 6 மாதம் வரை கட்டாயமாக வெறும் தாய்பால் மட்டுமே வழங்க வேண்டும். இவ்வாறு தாய்பால் வழங்குவதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக கர்ப்பிணிகளுக்கு உரிய ஆலோசனை, தமிழ்நாடு அரசின் சத்து நிறைந்த இணை உணவு வழங்கப்பட்டுவருகிறது.

கர்ப்பிணி தாய்மார்களும், பாலூட்டும் தாய்மார்களும் அரசினால் வழங்கப்படும் இணை உணவின் நன்மைகளை எடுத்துக்கூறி அவற்றை சரியான முறையில் உண்ண அறிவுரைகள் வழங்கப்பட்டுவருகின்றன. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது கிராமத்தை மற்ற அனைத்து கிராமங்களுக்கும் முன்னோடி கிராமமாக திகழச் செய்யும் வகையில் சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பாதுகாத்து பேணிகாக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

முன்னதாக, “மக்கள் ஆட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம்.

ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதிமொழிகிறோம்” என்ற வாக்காளர் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, குடியரசு தின விழாவினை முன்னிட்டு, ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் பேளூர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு - சமபந்தி போஜன நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் கலந்துகொண்டு பொதுமக்களுடன் உணவு உண்டார்.

இக்கிராம சபை கூட்டம் சமபந்தி போஜன நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் நா. அருள்ஜோதி அரசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கோபிநாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்லதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஷியாமலாதேவி, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் எம். பாஸ்கரன், வாழப்பாடி வருவாய் வட்டாட்சியர் ஜாகீர் உசேன், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் சுமதி, வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சரஸ்வதி, வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகன், சாந்தி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர்

இதேபோல், சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பூலாவரி கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்ற கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது குறித்து பூலாவரி ஊராட்சி மன்றத் தலைவர் ராதா செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இளைஞர்களை பாதிப்படையச் செய்யும் டாஸ்மாக் கடையை பூலாவரி கிராம எல்லைப் பகுதியிலிருந்து அகற்ற வேண்டும்.

டாஸ்மாக் கடைகளால் சாலையில் பெண்கள் குழந்தைகள் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் நடமாட முடியாத சூழல் உள்ளது. மேலும் விவசாயிகளைப் பாதிக்கும் எட்டு வழிச்சாலை திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கிராம ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details