சேலம் மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் - 19 (கோவிஷீல்டு) தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் இன்று(ஜனவரி16) தொடங்கி வைத்தார்.
கோவிட் 19 தடுப்பூசி முகாம்: சேலத்தில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ராமன் - கோவிட் தடுப்பூசி
சேலம்: கோவிட்-19 தடுப்பூசி முகாமை, சேலத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன் இன்று(ஜனவரி 16) தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம் முழுவதும் 25 ஆயிரத்து 318 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 12 மையங்களில் 27 ஆயிரத்து 800 மருந்து குப்பிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி முகாமின் தொடக்க நாளான இன்று மட்டும் 1200 நபர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வரும் கலைவாணி என்பவருக்கு முதல் கோவிட்-19 கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் சேலம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலிகள், மருத்துவமனை ஊழியர்கள் என 30க்கும் மேற்பட்டோருக்கு முதல் நாள் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பல் மருத்துவர் ஜார்ஜ் கூறுகையில், 'கரோனா தடுப்பூசி மிகவும் அத்தியாவசியமானது. எல்லோரும் செலுத்திக் கொள்ள வேண்டும். ஊசி செலுத்திய பிறகு எனது உடல் நிலையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. இயல்பாக இருக்கிறேன். கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு இன்று(ஜனவரி 16) நாடு முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அனைவரும் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் 12 இடங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களின் பட்டியல்:
1.அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
2.மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை 3.எடப்பாடி அரசு மருத்துவமனை
4.ஆத்தூர் அரசு மருத்துவமனை
5. ஓமலூர் அரசு மருத்துவமனை
6.தம்மம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
7. தலைவாசல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
8. காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
9. பனமரத்துப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
10. மகுடஞ்சாவடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
11. கொங்கணாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
12. காடையாம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 12 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.