சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சி அடுத்த அடிக்கரையில் மதுரைவீரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு அருகில் கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் ஐந்து ஏக்கருக்கும் மேல் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் ஆக்கிரமித்துள்ளார். மேலும் அங்கு 10 அடி உயரத்திற்கு மதில் சுவர் எழுப்பியுள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டதற்கு அவர் மிரட்டிவருகிறார்.
இந்தப் புகார் குறித்து ஈடிவி பாரத்திடம் அப்பகுதி வாசி பொன். சரவணன் தெரிவித்ததாவது, "பனமரத்துப்பட்டி பேரூராட்சியின் இரண்டாவது வார்டு பகுதிக்குள்பட்டது மதுரைவீரன் கோயில். இந்தக் கோயிலுக்கு அருகில் கமலா என்ற பிரபல தனியார் மருத்துவமனையின் உரிமையாளருக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கர் பண்ணை நிலம் உள்ளது.
அந்தப் பண்ணை நிலத்தை ஒட்டி ஐந்து ஏக்கருக்கு மேல் அரசுக்குச் சொந்தமான கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுமக்கள் குடிசை போட்டு வசித்துவந்தனர்.
பின்னர் 1994ஆம் ஆண்டு ராமசாமி நாயக்கர், டாக்டர் சரவணன் ஆகியோர் ரவுடிகளைக் கொண்டும் துப்பாக்கி காட்டி மிரட்டியும் பொதுமக்களை விரட்டினர்.
உயிர் பயத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறினர். தற்போது அவர்கள் பனமரத்துப்பட்டி அடிக்கரையில் உள்ள பல்வேறு இடங்களில் குடிசை அமைத்து வசித்துவருகின்றனர். அரசிற்குச் சொந்தமான பாறைகள் நிறைந்த கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தை தனியார் மருத்துவமனை உரிமையாளர் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து 10 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பியுள்ளார்.
மதில் சுவருக்கு உள்பகுதியில் இருக்கும் நிலத்தைச் சமன்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. இதனால் அங்கு இருக்கும் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படுகிறது. அப்போது அருகிலுள்ள குடிசைகளில் கற்கள் விழுந்து பொதுமக்களுக்கு காயம் ஏற்படுகிறது.