தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 15, 2020, 9:35 PM IST

ETV Bharat / state

மணல் குவாரிகளைத் திறக்க அரசு உத்தரவிட வேண்டும் - லாரி உரிமையாளர்கள் சங்கம்!

சேலம்: மணல் குவாரிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு தளர்வு அளித்து, உத்தரவிட வேண்டும் என்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மணல் குவாரிகளை திறக்க  கோரி ஆட்சியரிடம் மனு
மணல் குவாரிகளை திறக்க கோரி ஆட்சியரிடம் மனு

கரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால், பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கட்டுமானத் தொழில்களும் முழுவதும் முடங்கியுள்ளன. மேலும் மணல் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களை எடுத்து வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதால், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பெரும் பொருளாதார சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

எனவே, மணல் குவாரிகளைத் திறக்கக் கோரியும், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தக்கோரியும், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஒருங்கிணைந்த லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது.

லாரி உரிமையாளர்களின் கோரிக்கை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மணல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணையன், 'ஊரடங்கு உத்தரவினால் பல்வேறு இன்னல்களுக்கு மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் அதை சார்ந்த தொழிலாளர்கள் ஆளாகியுள்ளனர். கட்டுமானத் தொழிலாளர்கள் துயரத்தைப் போக்க, அரசு உடனடியாக மணல் குவாரிகளைத் திறக்க வேண்டும். மேலும் எம் சேண்ட் மண் விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை வழங்கும் மிகப்பெரிய வருவாயை இந்த மணல் குவாரி ஏற்படுத்தித் தரும்.
தற்போது தமிழ்நாட்டில் மதுக்கடையைத் திறக்க அக்கறை காட்டும் இந்த ஆட்சியாளர்கள் மணல் குவாரியைத் திறக்க மௌனம் காப்பது வேதனை அளிக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக, சேலம் மாவட்டத்தில் மணல் குவாரியைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பல்லாயிரக்கணக்கானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details