சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் எலிகள் உலாவருவது வாடிக்கையாக இருந்தது. அவற்றை அப்புறப்படுத்த நோயாளிகள் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதனிடம் புகார் தெரிவித்தனர். அவரும் எலிகளை பிடிக்க உரிய நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினார்.
இதனிடையே, எலிகள் நோயாளிகளுக்கு தொல்லை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து நமது ஈடிவி பாரத் தளத்தில் செய்தியும் வெளியிடப்பட்டது.
வீடியோ வைரலாகவே ஒரு சில மணி நேரங்களில் எலிகளைப் பிடிக்க கூண்டுகள் வைத்து பத்துக்கும் மேற்பட்ட எலிகள் பிடிக்கப்பட்டன. எலிகள் பிடிக்கப்பட்ட வீடியோக்கள், படங்களை செய்தியாளர்களுக்கு அனுப்பிய மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், ”நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்து எலிகள் பிடிக்கப்பட்டன. இது போல் மீண்டும் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என உறுதியளித்துள்ளார்.
உடனடியாக நடவடிக்கை எடுத்து நோயாளிகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்த மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களது உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க:அரசு மருத்துவமனை ஐசியூவில் சுதந்திரமாக உலா வரும் எலி!