நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்த மாவட்ட ஆட்சியர் - நல்லாசிரியர் விருது
சேலம்: மாவட்டத்தில் 14 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் சிறப்பித்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆசிரியர் தினவிழா, நல்லாசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா இன்று (செப்டம்பர் 7) நடைபெற்றது.
இவ்விழாவிற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை, சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையேற்று சேலம் மாவட்டத்தில் 14 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, "அறியாமை என்ற இருளை நீக்கி, அறிவுக் கண்ணைத் திறந்திடும் மகத்தான பணியினை ஆற்றிவரும் ஆசிரியப் பெருமக்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுவருகின்றது.
2019-2020ஆம் கல்வியாண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் 6 உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், 6 தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், 1 சுயநிதி / மெட்ரிக் பள்ளி ஆசிரியர் மற்றும் 1 ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர் என மொத்தம் 14 ஆசிரியர்கள் மாநிலத் தேர்வுக் குழு மூலம் நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த 14 நல்லாசிரியர்களுக்கும் டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது, வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசுத் தொகை உள்ளிட்டவை ஒவ்வொரு நல்லாசிரியருக்கும் வழங்கப்பட்டன.
ஆசிரியர் பணி அறப் பணி அத்தகைய ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு அளித்து, மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இவ்விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்திபரிமளம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்பட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.