தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகளவில் பிரபலமாகும் சேலம் ஜவ்வரிசி... மத்திய அரசு அளித்த அங்கீகாரம்!

சேலம் ஜவ்வரிசிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளதால் அதன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி, சேலம் ஜவ்வரிசி உலக அளவில் பிரபலமாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகளவில் பிரபலமாகும் சேலம் ஜவ்வரிசி
உலகளவில் பிரபலமாகும் சேலம் ஜவ்வரிசி

By

Published : Apr 2, 2023, 8:55 PM IST

சேலம்:ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்துடன், போலியாக வேறு பெயரில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும் என்பதால் இதற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை , தஞ்சாவூர் கலைத்தட்டு , திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம் , கொடைக்கானல் மலைப்பூண்டு, உடன்குடி பனங்கற்கண்டு, சோழவந்தான் வெற்றிலை , மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 45 உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய ஆடைகள் உற்பத்தி பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை,நெகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதனால் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும் பதினைந்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்துள்ளது. இந்த நிலையில் புவிசார் குறியீடு பெற்ற சேலம் ஜவ்வரிசி குறித்து உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் மதிவாணன் கூறுகையில், ”சேலத்தை மையமாகக் கொண்டு சுமார் 200 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விவசாயிகள் மரவள்ளி கிழங்கு பயிர் செய்து வருகின்றனர் .சேலம் நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு மானாவரி பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே ஜவ்வரிசி உற்பத்தியில் 95% சேலத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஐந்து சதவீத ஜவ்வரிசி ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் உற்பத்தியாகிறது. இந்தியாவின் மொத்த ஜவ்வரிசி தேவையை சேலம்தான் பூர்த்தி செய்து வருகிறது என்பது நமக்கெல்லாம் பெருமை. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக மத்திய அரசு தற்போது புவிசார் குறியீடு வழங்கி சேலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இதனால் ஜவ்வரிசி உற்பத்தியும் வணிகமும் அதிகரிக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது .

இந்திய அளவில் தெரிந்த சேலம் ஜவ்வரிசி இனி உலக அளவில் பிரபலமாகும்.மேலும் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜவ்வரிசி உணவுப் பொருளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கை மத்திய மாநில அரசுகள் அளித்து இந்த தொழிலை ஊக்குவிக்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: ''தருமபுரியில் 500 ஏக்கர் பரப்பளவில் ஓலா தொழிற்சாலை அமையவுள்ளது'' - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

ABOUT THE AUTHOR

...view details