சேலம் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
ஆறாம் கட்ட போராட்டமாக வரும் ஜன.29ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இட ஒதுக்கீடு கேட்டு இப்போது போராடவில்லை. கடந்த 40 வருடங்களாக போராடி வருகிறோம்.
எனவே அரசு கணக்கிடுகிறோம், குழு அமைக்கிறோம் என காலம் தாழ்த்தாமல் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வழங்கிய பிறகே அதிமுக கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் பேசுவார்” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.மணி மேலும், கரோனா தொற்று காலகட்டத்தில், கனமழையால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்தன. இதில், விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: பாலிடெக்னிக் கல்வி: பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க பாமக நிறுவனர் கோரிக்கை!