தமிழ்நாடு சுகாதார துறையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் மாதம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 6 வார காலத்திற்குள் மருத்துவர்களின் கோரிக்கைள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார். ஆனால், மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக இதுவரை எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டுக்குழுவினர், 'தமிழகத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பணிபுரிந்து வருவதாகவும், மருத்துவர்களுக்கு தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 354 அரசாணையை அறிவித்து, அதன்படி ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் அறிவித்தாகவும்; ஆனால், அந்த அறிவிப்பின்படி ஊதிய உயர்வு முழுமையாக அமல்படுத்தாமல் உள்ளதால், அதனை முழுமையாக அமல்படுத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
அரசு மருத்துவர்களின் பட்டமேற்படிப்பிற்கு முழுமையாக 50 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.