சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரோனா வைரஸ் நோய் தொற்றானது சமூகப் பரவலாக மாறாமல் தடுத்திடவும், நோய் தடுப்புப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டமிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் உத்தரவின்படி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) காலை 6.00 மணி முதல் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) இரவு 9.00 மணி வரை சேலம் மாநகராட்சிப் பகுதிகளுக்கு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, முழு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் 144 தடை உத்தரவை மீறி வருவோர் மீது கடும் நடவடிக்கை உத்தரவிடப்பட்டது. மாநகர காவல் ஆணையாளர் த. செந்தில்குமார், துணை ஆணையாளர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 100 விழுக்காடு முழு ஊரடங்கு அமுல்படுத்தியதையடுத்து இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இதுவரை 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.