நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பிற மாநிலங்களைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள பிற மாநிலங்களைச் சார்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சேலம் மாவட்டத்தில் 55, ஈரோடு மாவட்டத்தில் 92, தருமபுரி மாவட்டத்தில் நான்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்பது, திருப்பத்தூர் மாவட்டத்தில் 25, செங்கல்பட்டு மாவட்டத்தில் 47, சிவகங்கை மாவட்டத்தில் 22, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 93 எனப் பணிபுரிந்துவந்த மொத்தம் 347 குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சேலம் ரயில் நிலையத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் ராமன் வழியனுப்பிவைத்தார். மேலும் ஆட்சியருடன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. திவாகர், சேலம் வருவாய் கோட்டாட்சியர் மாறன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செல்வக்குமார், சேலம் மாநகர காவல் துணை ஆணையர் பெ. தங்கதுரை, சேலம் ரயில்வே கோட்ட மண்டல மேலாளர் சுப்பாராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: குடிபெயர் தொழிலாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் மோசடி: உ.பி. அரசு