சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்து 35 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று வரை 33 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் இரண்டு பேர் இன்று சிகிச்சை முடிந்து, வீடு திரும்பினர். அவர்களை மாவட்ட ஆட்சியர் ராமன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சேலம் மாவட்ட காவல் ஆணையர் செந்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் ராமன், "சேலம் மாவட்டம் தற்போது கரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. மேலும் சேலம் மாவட்டத்திற்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு நோய் தொற்று இல்லாத பட்சத்தில் மட்டுமே வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இவர்களை தனிமைப் படுத்துவதற்காக சேலம் ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் இட வசதிகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.