விஜயபாஸ்கரும் ஆர்பி உதயகுமாரும் செய்தியாளர் சந்திப்பு! சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வகை பழங்கள், பசு மாடு, கோழிகள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் நேரில் சந்தித்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதன் பிறகு, விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதையடுத்து கழகத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இனி முழுவேகத்தோடும் முழுமையான வலிமையோடு அதிமுக மிளிரும்.
கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் ஆகியோர் தெளிவுபடுத்திவிட்ட பிறகு, பிறரின் கருத்து தொடர்பான கேள்விகள் தேவையில்லை. மத்திய சுகாதாரத்துறையிடமிருந்து வரப்பெற்ற தகவலை அடுத்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு கரோனாவை எச்சரிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.
இதைத்தொடர்ந்து ’மத்திய அரசு எப்போதுமே மருந்துகளை கொடுக்காது, மாநில அரசு தான் வாங்க வேண்டும்' என்று தெரிவித்தார். இதே போல முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ''அதிமுக கிளைக் கழக செயலாளராக கட்சியில் இணைந்து தற்போது ஒன்றரை கோடி தொண்டர்களால் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொண்டர்களின் முகமாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.
சுனாமி அலையில் சிக்கித் தவித்த அதிமுகவை ஆலமரமாய் இருந்து பாதுகாத்து வருகிறார்.
கட்சியை துரோகத்தில் இருந்து காப்பாற்றி கலங்கரை விளக்கமாக திகழ்கிறார். அதிமுக அரசின் சாதனைகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு பெற்றிருந்தனர். மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி மலர, சபதம் ஏற்பும் இன்றும் ஒரு நல்ல தீர்ப்பு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இல்லையென்றால் இயக்கத்தை துரோகிகளிடம் அடமானம் வைத்து சென்றிருப்பார்கள்.
இயக்கத்தை ஸ்டாலின் காலடியில் அடகு வைத்திருப்பார்கள். அதிமுகவின் ஒரே நம்பிக்கை எதிர்காலம் எடப்பாடி பழனிசாமி தான். தொண்டர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையைப் பெற்றுள்ளார். இதைப் புரிந்து கொள்ளாமல் தெரிந்தும் தெரியாததுபோல் உள்ளனர். தூங்குவதைப் போல் சிலர் நடிக்கின்றனர்' என்று செய்தியாளர்களிடம் ஆவேசத்துடன் கூறினார்.
இதையும் படிங்க:‘ஏழை, எளிய மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செய்யவில்லை’ - அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!