சேலம்:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்கள் பயணமாக நேற்று சேலம் சென்றார். இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டையொட்டி (karunanidhi centenary celebrations) சேலம் அண்ணா பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை (Salem Karunanidhi Statue) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 10) திறந்து வைத்தார்.
16 அடி உயரம் கொண்ட முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து, பிறகு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சிலை சிறப்பு விழாவில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ஓய்வூதியதாரர்கள் தொடர்பான புதிய அரசாணையை ரத்து செய்க: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கட்டி முடிக்கப்பட்ட சேலம் புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம் பழைய பேருந்து நிலையத்தை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 96.53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரடுக்கு பேருந்து நிலையமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அப்போது பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் பயணத்தையும் தொடங்கி வைத்தார்.