சேலம்: கந்தம்பட்டி நெடுஞ்சாலை அருகிலுள்ள கோனேரிக்கரை கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை புகுந்ததாக நேற்று (ஜூன் 26) தகவல் பரவியது. இதனையடுத்து சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையிலான வன அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் சிறுத்தையைத் தீவிரமாக தேடி வந்தனர்.
இரவு தொடங்கி காலை வரை சிறுத்தையைத் தேடியும், அது வன அலுவலர்கள் கண்களில் தென்படவில்லை.
இதனையடுத்து கந்தம்பட்டி பகுதியில் புதியதாக ஏதேனும் தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என வன அலுவலர்கள் மக்களுக்கு அறிவுறுத்தினர்.
சிறுத்தை தேடும் பணி தீவிரம்:
இதுகுறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் கூறுகையில், "கரும்புத் தோட்டத்தில் பதிந்துள்ள கால் தடங்கள் சரியாகத் தெரியவில்லை.
கரும்பு தோட்டத்தில் சிறுத்தை புகுந்ததாகப் பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து வனத்துறை, வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை, மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அப்பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு, தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுத்தையை பிடிக்க வன அலுவலகர்கள் தீவிரம் பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை:
மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். தற்போது தோட்டத்திற்குள் வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ட்ரோன் கேமரா மூலமாகவும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், விலங்கின் நடமாட்டம் எதுவும் இதுவரை தென்படவில்லை. இருந்தாலும் தொடர்ந்து கரும்புத் தோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடும் பணி நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வனவிலங்குகள் தாக்கி சிறுத்தை குட்டி உயிரிழப்பு!