கரோனோ வைரஸ் நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறிவிடக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள சூழலில் காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மின்வாரியப் பணியாளர்கள் என அரசு ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து இரவுபகலாக தங்களது பணியைச் செய்து வருகின்றனர்.
இந்த நெருக்கடியான நிலையில், பணியாற்றும் அலுவலர்களுக்கு முறையாக உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த தன்னார்வலர்கள் ஆங்காங்கே தங்களது இல்லங்களில் உணவு சமைத்து பொட்டலமாக எடுத்து வந்து பணியாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சிற்பக்கலைஞர் ராஜா ஸ்தபதி. இவர், கடந்த 16 நாள்களாகத் தொடர்ந்து மதிய உணவு தயாரித்து கன்னங்குறிச்சி பகுதியில் பணியாற்றும் காவலர்கள், பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவுகளை வழங்கி வருகிறார்.