சேலம்:உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழு இறைச்சி கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், "சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் எனது தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி, ஆரோக்கியபிரபு, ரவி, சிவலிங்கம், புஷ்பராஜ், குமரகுருபரன், ரமேஷ், முத்துசாமி, கண்ணன் ஆகியோர் அடங்கிய குழு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டோம்.
அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, குரங்கு சாவடி, ரயில்வே ஜங்ஷன், வஉசி மார்க்கெட் , சின்ன கடைவீதி போன்ற பகுதிகளில் உள்ள 54 கடைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் 5.8 கிலோ, சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்பட்ட பழைய மீன் இறைச்சி 50 கிலோ, பழைய கெட்டுப்போன ஆட்டிறைச்சி 17 கிலோ ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அங்கேயே கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும் இறைச்சிக் கடைகளில் விற்கப்படும் விவரம் குறிப்பிடாத மசாலா பாக்கெட்டுகள் 18 கிலோ ஆகியவையின் மாதிரி சேகரிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 34,000 ரூபாய் ஆகும். மேலும் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய எட்டு உணவு வணிக நிறுவனங்களுக்குத் தலா 2,000 ரூபாய் வீதம் 16,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2மாதம் காத்திருக்க முடியாதா?; நெற்பயிர்கள் அழிப்பதை பார்த்து கண்ணீர் வந்துவிட்டது: என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்த நீதிபதி!