சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வரும் 25, 26ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக சேலத்தில் உள்ள, தொழில் நிறுவனங்கள், சிறு வணிக நிறுவனங்கள், கடைகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் ஆயுதபூஜை கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள வஉசி பூ மார்க்கெட் பகுதியில் ஆயுதபூஜை கொண்டாட்டம், வழிபாட்டுக்காகப் பொதுமக்கள், சிறு வணிகர்கள் ஆயிரக்கணக்கில் ஒரே இடத்தில் கூடி அதிக அளவில் பூவை இன்று வாங்கிச் சென்றனர்.
வழக்கமாக கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ இன்று ஒரு கிலோ 240 ரூபாய்க்கும், குண்டுமல்லிப்பூ ஒரு கிலோ 700 ரூபாய் வரையிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து பேசிய பூ மார்க்கெட் வியாபாரி குமார், "சேலம் வஉசி பூ மார்க்கெட்டிற்கு ராயக்கோட்டை, பொம்மிடி, தேன்கனிக்கோட்டை, ஓசூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிக அளவு பூ லோடு வருகிறது. சாமந்தி, காக்கரட்டான், குண்டு மல்லி, செண்டு மல்லி, ஜாதி மல்லி, ரோஜா எனப் பலவகை பூவை மார்க்கெட்டில் விற்பனை செய்கிறோம்.