சேலம்: விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ். ஆர். பார்த்திபன் எம்பி ”மத்திய அரசின் 'உதான்' திட்டத்தின் கீழ் சேலம் விமான நிலையத்திலிருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக 40 முறைக்கு மேல் மத்திய விமானத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.
அதன் அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட சேலம் விமான சேவை வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் மீண்டும் தொடங்கப்படும். இதற்காக அலையன்ஸ் ஏவியேஷன் நிறுவனமும், இண்டிகோ நிறுவனமும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
அலையன்ஸ் ஏவியேசன் நிறுவனம், பெங்களூரு - சேலம், கொச்சின் - சேலம், சேலம் - பெங்களூரு ஆகிய விமான சேவைகளை வாரத்தில் ஏழு நாட்களுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதே போல இண்டிகோ நிறுவனம் பெங்களூரு - சேலம், ஹைதராபாத் - சேலம், சேலம் - பெங்களூரு ஆகிய சேவைகளை வாரத்தில் நான்கு நாட்களுக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மேலும் சேலம் - சென்னை விமான சேவைக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. அதற்காக மீண்டும் மத்திய விமானத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க இருக்கிறேன். அடுத்து நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே சேலம் - சென்னை விமான சேவை தொடங்க அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.