தனியார் ஷேர் மார்க்கெட் நிறுவனத்தில் தீ விபத்து! - தனியார் பங்கு வர்த்தக சந்தை
சேலம்: தனியார் பங்கு வர்த்தக அலுவலக அறையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமாகின.
சேலம் அழகாபுரம் கைலாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது வீட்டின் தளத்தில் இவருக்கு சொந்தமான பங்கு வர்த்தக நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 28) இரவு 9 மணியளவில் ஊழியர்கள் பணி முடிந்து சென்ற நிலையில் இரவு 10.45 மணி வரை வழக்கம் போல் ராமச்சந்திரன், பங்கு வர்த்தக பணிசெய்துவிட்டு உறங்க சென்றுள்ளார்.
நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில், முதல் தளத்தில் உள்ள பங்கு வர்த்தக இந்த நிறுவனத்தில் இருந்து கரும் புகை வெளியேறி உள்ளது.
இதனை கண்ட ராமச்சந்திரன் உடனடியாக செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.
எனினும் இந்த தீ விபத்தில், கணினிகள், லேப்டாப்புகள், 4 ஏசி இயந்திரங்கள், பர்னிச்சர்கள் எரிந்து நாசமாகின.
இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் இருக்கும் எனவும், ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நேரிட்டு இருக்கலாம் எனவும் முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து, அழகாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.