சேலம் மாவட்டத்தில் ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் அந்தத் திட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்து கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து விவசாயிகள் கூறுகையில், "பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விவசாயிகள் மீது பிரயோகம் செய்ய எடுத்துள்ள புதிய ஆயுதம்தான் இருகூர்-தேவன்னகொந்தி பைப் லைன் திட்டம் (IDPL).
கோயம்புத்தூர் இருக்கூரிலிருந்து கர்நாடக மாநிலத்தின் தேவன்னகொத்தி வரையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக பைப் லைன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மொத்தத் தொலைவான 312 கிலோமீட்டர் தூரமும் 69 அடி அகலமும் விவசாய நிலங்களை விவசாயிகளின் அனுமதியில்லாமல் விவசாயப் பயிர்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் நிலம் துண்டாடப்படுவதோடு இல்லாமல், நிலத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்படும் நிலங்களில் மரங்கள் பயிரிடவோ, கிணறு, போர்வெல் அல்லது கட்டுமானப் பணிகளோ மேற்கொள்ள முடியாது.