சேலம்: பெரியபுத்தூர் பகுதியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆலைக்கரும்பு, மாட்டுத்தீவனம் உள்ளிட்டவைகளை பயிரிடப்பட்டு வருகின்றனர். பெரியபுத்தூர் அணையில் இருந்து ராஜவாய்க்கால் நீரோடையின் மூலமாக வரும் தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நீரோடையின் நடுவில் கான்கிரீட் போடப்பட்டு உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியை மின்சாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
இதனால் இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீர் செல்லும் நீரோடையை அடைத்து உயர் மின்கம்பம் அமைப்பதால் கடந்த சில நாள்களாக விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முதலில் நீரோடையின் ஓரமாக உயர் மின்கம்பம் அமைப்பதாக அதிகாரிகள் உறுதிமொழி அளித்த நிலையில், நீரோடையின் நடுவே பில்லர் அமைத்து பணிகளை மேற்கொண்டு வருவதால் பாசனப்பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளைக் காடாக மாறிவிடும் என்றும் இதனால் பாசனப்பகுதி முழுவதும், விவசாயம் செய்ய வழியில்லாத நிலைமை ஏற்படும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.