சேலம் நெடுஞ்சாலை நகரில் அமைந்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆத்தூர் வட்டார தமிழக விவசாயிகள் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து, வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் சண்முகம்,செயலாளர் பழனிவேல், பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் கூறுகையில்," மேட்டூர் உபரி நீரை நீரேற்றம் முறையின் மூலம் சேலம் கிழக்கு மாவட்ட ஏரிகளிலும் நிரப்பும் வகையில், மேட்டூர் நீரை ஆத்தூர் வசிஷ்ட நதியில் இணைக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம்.
இந்த திட்டம் மூலம் நான்கு மாவட்ட விவசாயிகள் பொதுமக்கள் பயனடைவார்கள். இதுதவிர மேலும் பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன் வைத்தோம். இதனைகேட்டுக்கொண்ட முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த விவசாயிகள் ஆத்தூர் வட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட முடியாத நிலையில் ஏற்பட்டது. இதனை உணர்ந்த தமிழக முதலமைச்சர் படைப்புழுக்கள் தாக்குதலிலிருந்து மக்கா சோள பயிர்கள் தப்ப உரிய நடவடிக்கை எடுத்தார். இதேபோன்று பல்வேறு நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து கொடுத்துள்ளார்.
இதனால் முதலமைச்சரின் நேரில் சந்தித்து தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளோம் . நிச்சயமாக அதிமுக கூட்டணி வெல்லும்." என்று தெரிவித்தனர்.