சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டப்பேரவை தொகுதி லத்துவாடி பகுதியிலுள்ள அம்மா மினி கிளினிக்கை திறந்துவைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.17) காலை வருகை தந்தார். அதன்பிறகு அரியலூர் மாவட்டத்திற்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது அங்கு பேசிய அவர், சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் 90 விழுக்காடு விவசாயிகள் நிலம் கொடுப்பதாக உறுதியளித்ததாக கூறியிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் - சென்னை எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் இன்று கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேசிய விவசாயி மோகனசுந்தரம், "தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு அரசு விழாவிலும் விவசாயிகள் எட்டு வழிச் சாலைக்கு நிலம் கொடுக்க ஒப்புக்கொண்டதாக பொய்யான தகவலை கூறிவருகிறார். இதைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். முதலமைச்சரையும், மத்திய அரசையும் கண்டித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பொய்யான தகவல்களை கூறிவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் வீடுகளின் முன்பு கறுப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தலைவாசலில் அம்மா கிளினிக்: முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைப்பு!