சேலம் சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் மெகதாஜ் பேகம் (55). இவர் மாந்ரீகம் உள்ளிட்ட நம்பிக்கைகளில் விருப்பம் உடையவர். இந்நிலையில், சேலத்தை சேர்ந்த பிரபு (40) என்பவர் மெகதாஜ் பேகத்திடம் அவரின் வீட்டில் தோஷம் இருப்பதாகவும், அதை கழிக்க சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய மெகதாஜ் பேகம், கடந்த மே மாதம் தனது பூஜைக்கு ஏற்பாடு செய்தார். அப்போது பிரபு பேகத்திடம் விபூதி, குங்குமம் வாங்கி வருமாறு வெளியே அனுப்பிவிட்டு வீட்டிலிருந்த 25 பவுன் நகையை திருடிச்சென்று விட்டார்.
தன்னுடைய நகைகள் திருடு போனதை அறிந்த பேகம், பிரபுவிடம் எடுத்த நகையை திரும்ப தன்னிடம் கொடுக்குமாறு கடந்த நான்கு மாதமாக கேட்டு வந்துள்ளார். அதற்கு பிரபு தான் நகையை எடுக்கவில்லை என்றும், ரத்தம் கக்கி சாகும் படி செய்வினை வைத்து விடுவேன் என்று அவரை மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சிடைந்த மெகதாஜ் பேகம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். புகாரின் அடிப்படையில் பிரபுவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும், தான் திருடிய நகையை சேலத்தில் உள்ள பெரிய நகைக் கடைகளில் விற்பனை செய்து, புதிய நகை, டூவீலர் மற்றும் நிலம் வாங்கியது தெரியவந்தது.
அதன் பின் காவல்துறையினர் அவரிடம் இருந்து டூவீலர் நிலபத்திரம் மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் சேலத்தில் பலரிடம் மாந்திரீகம் செய்து விடுவதாக மிரட்டி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரணை நடத்த சூரமங்கலம் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:ரிசார்ட் உரிமையாளரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த ஐவர் கைது!