சேலம்: தமிழ்நாடு முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் திலகவதி. இவரது மகன் பிரபு திலக், இவர் சேலம் அரியானூர் பகுதியில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ஸ்ருதி திலக் (42). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை ஸ்ருதி திலக் அவரது தந்தையுடன் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார். இதில் ஸ்ருதி திலக் கூறி இருப்பதாவது, எனக்கும் திலகவதி ஐபிஎஸ் மகன் டாக்டர் பிரபு திலக்குக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு சேலத்தில் திருமணம் நடந்தது.
எங்களுக்கு 14 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எனது கணவர் சேலம் விநாயக மிஷின் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணமான நாளில் இருந்து எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இருப்பினும் குழந்தைகள் இருந்ததால் நான் அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். அவருடைய தாய் ஐபிஎஸ் ஆக இருந்ததால் எப்பொழுதும் என்னை மிரட்டி நீ எங்களை மீறி நடந்தால் உன்னுடைய வாழ்க்கையை அழித்துவிடுவோம் என்று மிரட்டி வந்தனர்.