சேலம் கொண்டலாம்பட்டியில் வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ராஜ முத்து, சித்ரா, ஜெயசங்கரன், நல்லதம்பி, மணி, சுந்தர்ராஜன், அருள், சதாசிவம், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சேலத்தில் நடைபெறும் அரசு சார்பிலான ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக எம்.எல்.ஏக்களில் ஒரு சிலரை மட்டுமே அழைக்கிறார்கள். அதிமுக எம்.எல்.ஏக்களை அலுவலர்களும், அமைச்சரும் புறக்கணிக்கின்றனர்.
செய்தியாளர்களைச் சந்திக்கும் அமைச்சர் செம்மலை! மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அறிவித்தபடி, சேலத்தில் 3 ஆயிரத்து 800 படுக்கைகள் மட்டுமே உள்ளன என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அதில் எந்த அரசியலும் இல்லை. ஆனால், மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட 11 ஆயிரத்து 500 படுக்கைகள் உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறி வருகிறார்.
அத்தனை படுக்கை வசதிகளும் எந்தெந்த சட்டபேரவைத் தொகுதிகளில் இருக்கிறது என்பதை அவர் விளக்க வேண்டும். இரும்பாலை வளாகத்தில் ஐநூறு ஆக்சிஜன் படுக்கை வசதியை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிலையில் அங்கு அவசரக் கதியில் நேற்று (மே.29) சிகிச்சைக்கு அனுப்பப்பட்டவர்களில், இருவர் இறந்து விட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
சேலம் மாநகரில் உள்ள மூன்று தகனமேடைகளில் மட்டும் சராசரியாக ஒரு நாளைக்கு 15 முதல் 26 உடல்கள் எரிக்கப்படுகின்றன. ஆனால், அரசு கரோனா பாதித்து இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து கூறி வருகிறது. தவறுகளை சுட்டிக் காட்டுவதுதான் எதிர்க்கட்சியின் கடமை.
ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்க்கட்சித் தலைவரை அரசியல் செய்கிறார் என்று பேசியது தவறானது. சுகாதார இணை இயக்குநர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் விவரம் குறித்த உண்மைத் தகவலை வெளியிட மறுக்கிறார். போதுமான படுக்கைகள் இருப்பு இருந்தால் அரசு மருத்துவமனைகள் வாசலில் ஏன் நோயாளிகள் காத்திருக்கின்றனர். இன்றுவரை நோயாளிகள் காத்திருக்கும் நிலைமை மாறவில்லை. அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவிப்புகள் வெறும் காகிதத்தில் மட்டுமே தவிர செயல்பாட்டில் அல்ல" என்றார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் செம்மலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலமைச்சரிடம் நற்பெயர் வாங்குவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி கரோனா பாதிப்பு விவரங்களை குறைத்து கூறுகிறார். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டத்தின் நிலைமையை தனி கவனம் செலுத்தி மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்.
அரசு நிர்ணயித்தக் கட்டணத்தை விட, கூடுதலாக கட்டணம் வசூலித்து சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்படும். ஊரடங்கை அறிவித்துவிட்டு சென்னையிலிருந்து ஆறு லட்சம் பேரை சொந்த ஊர்களுக்குச் செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்து வசதி செய்து கொடுத்து தொற்றுப் பரவலை அதிகரிக்கச் செய்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம், இலவச கல்வி - ஒன்றிய அரசு அறிவிப்பு