தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுகவினர் அனைவரும் முதலமைச்சர்களே'  - எடப்பாடி பழனிசாமி - எம்ஜிஆர் 103ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர்

சேலம்: அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் முதலமைச்சர் பதவிக்குத் தகுதியானவர்கள் என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

CM palanisamy, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
CM palanisamy, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

By

Published : Jan 22, 2020, 7:44 AM IST

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில், எம்ஜிஆர் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, "பேரறிஞர் அண்ணா கண்ட கனவை நனவாக்கியவர் எம்ஜிஆர். அவர் நடித்த படத்தின் வாயிலாக நாட்டு மக்களுக்குள் தேசப்பற்றை ஏற்படுத்தி, இளைஞர்களையும் ஒற்றுமைப்படுத்தினார்” என்றார்.

எம்ஜிஆரின் தத்துவப் பாடல்கள் சிலவற்றை சுட்டிக்காட்டி பேசிய அவர், அன்றைய கால திரைப்படத்தோடு இன்றைய கால திரைப்படத்தை பொதுமக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எம்ஜிஆர் மறைந்த பின் அதிமுக மறைந்துவிடும் என கலைஞர் கனவு கண்டார். ஆனால் அதை உடைத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுகவை பலப்படுத்தினார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவின் ஆட்சி முடிவுக்கு வரும் என ஸ்டாலின் கணக்குப் போட்டார். ஆனால் தற்போது இந்த ஆட்சி மூன்று ஆண்டுகளை நிறைவுசெய்ய உள்ளது.

எடப்பாடி பழனிசாமி மட்டும் முதலமைச்சர் அல்ல; அதிமுகவில் உள்ள அனைவருமே முதலமைச்சர்தான். அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம். திமுகவை பொறுத்தவரை ஸ்டாலின் தன்னைத்தானே முதலமைச்சர் என நினைத்துக் கொண்டுள்ளார். அதிமுகவை போன்று திமுகவில் இருப்பவர்களை முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு ஸ்டாலின் அனுமதிப்பாரா?.

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு எப்போதும் நிறைவேறாது. ஸ்டாலின் தனக்குப் பிறகு வாரிசு அரசியல் செய்வதற்காகவே உதயநிதியை தயார்படுத்திவருகிறார். தமிழ்நாட்டில் விஞ்ஞான முறையில் ஆட்சிசெய்யும் அதிமுக அரசு, ஒரே ஆண்டில் 9 மருத்துவக்கல்லூரிகளை கொண்டுவந்துள்ளது. இந்தாண்டு மேலும் இரண்டு கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. 13 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக கூட்டணியால் ஒரு மருத்துவக் கல்லூரியை கொண்டுவர முடிந்ததா?.

அதிமுக அரசு எதையும் செய்யவில்லை என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் இந்த அரசு தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால்தான் அரசுக்கு சிறந்த நிர்வாகத்துக்கான விருது கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெரியார் எதிர்ப்பு அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபடுகிறாரா? - பதில் அளிக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்...

ABOUT THE AUTHOR

...view details