சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, '2023ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டு மகிழ்ச்சிகரமாக இருப்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது. எக்காலத்திலும் அதிமுக எவராலும் வீழ்த்த முடியாது என்ற நிலைக்குச் சான்றாக உள்ளது.
சேலம் பகுதி மக்களுக்கு நன்மை செய்ய எந்த நேரமும் தயாராக உள்ளேன். உள்ளூரில் இருப்பவர்கள் மட்டும்தான் நேசக்கரம் நீட்டுவார்கள். வெளியூரில் இருப்பவர்களுக்கு எந்த கஷ்டமும், நஷ்டமும் தெரியாது. அதிமுக ஆட்சியில் எப்படி இருந்தது, அதற்கு முன்பாக எப்படி இருந்தது என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாகும். சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள் மூலமாக போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக சேலம் திகழ்ந்து வருகிறது. சேலம் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னைகளுக்கு அதிமுக ஆட்சியில் தீர்வு கொடுக்கப்பட்டது.
இந்தியாவிலேயே தார் சாலைகள் அதிகம் அமைக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது, அதிக தார் சாலைகள் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தேன். ஆனால், நான் பெற்ற பிள்ளைகளுக்கு திமுக பெயர் வைத்து வருகிறது.
எட்டு வழிச்சாலையை நாட்டின் வளர்ச்சிக்கு கொண்டு வரும்போது திமுக எதிர்த்தது. ஆனால் தற்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு எட்டுவழிச்சாலை வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு ஒரு பழமொழி கூறுவார்கள், ‘மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்’ என்று.
நான் கொண்டு வந்தால் தவறு என்று கூறுகிறார்கள். அவர்கள் கொண்டு வந்தால் சரி என்று சொல்கிறார்கள். ரூ.10,000 கோடியில் உலக தரத்துக்கு ஏற்றவாறு பசுமை வழிச்சாலை மத்திய அரசிடம் போராடி பெறப்பட்டது. இந்தியாவிலேயே எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக, கையகப்படுத்தும் நிலத்துக்கு இவ்வளவு இழப்பீடு எந்த ஆட்சியிலும் கொடுக்க முன் வந்ததில்லை.
மரங்களுக்கும் அதன் தன்மையினைப் பொறுத்து இழப்பீடு அறிவிக்கப்பட்டது. ஒரு வீட்டின் மதிப்புக்கு ஏற்றவாறு அதற்கான இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்தையும் திமுக எதிர்த்தது.