சேலம்:தமிழ்நாடு சட்டப்பேரவையில், நேற்று (அக் 18) நடைபெற்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அவையிலிருந்து வெளியேற்றி, ஒரு நாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஈபிஎஸ் தரப்பினர் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய நிலையில், காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் காவல்துறையினரின் தடையை மீறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஈபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கறுப்பு உடை அணிந்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஈபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.