தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் யானை தந்தங்கள் பறிமுதல்: ஐவர் கைது

சேலத்தில் மேட்டூர் அருகே 11 கிலோ எடையுள்ள இரண்டு பெரிய தந்தங்களைக் கடத்திய வழக்கில் ஐந்து பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.

சேலத்தில் யானை தந்தங்கள் பறிமுதல்
சேலத்தில் யானை தந்தங்கள் பறிமுதல்

By

Published : Aug 21, 2021, 10:07 AM IST

Updated : Aug 21, 2021, 12:18 PM IST

சேலம்:தமிழ்நாட்டில் யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக இந்தியா டிராபிக் அமைப்பின் ரகசிய தகவலின்பேரில், தமிழ்நாடு முதன்மை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவின்படி கோவை மாவட்ட வன அலுவலர் டி. வெங்கடேஷ், உதவி வனப் பாதுகாவலர் செந்தில்குமார், வனச்சரகர்கள் கொண்ட தனிப்படை விசாரணை மேற்கொண்டது.

அதன்பேரில், சேலம் மாவட்டம் வாழப்பாடி வனச்சரகத்திற்குள்பட்ட மேட்டூர் அருகில் 11 கிலோ எடையுள்ள இரண்டு பெரிய தந்தங்களை வைத்திருந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சடையன் மகன் சசிகுமார் (22), பழனிசாமி மகன் சேட்டு (41), முதுகுளத்தூர் அருகே சாத்தனூரைச் சேர்ந்த இருளாண்டி மகன் அருண்குமார், மேட்டூரைச் சேர்ந்த முருகன் மகன் பரத் (23), பரமேஸ்வரன் மகன் பிரவீன் குமார் (24) ஆகிய ஐந்து பேரை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேகர் குமார் நீரஜ் மேற்பார்வையில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிபிஐ விசாரணையில் வெளியான தகவல்கள்

யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு அதன் தந்தங்கள் பல லட்சம் மதிப்பில் கள்ளச் சந்தையில் விற்பனை செய்துவரும் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இச்சம்பவத்தின் பின்னணியில் பெரிய கும்பல் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சேகர் குமார் நீரஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வனவிலங்குகளை வேட்டையாடி தந்தம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய பெரிய 'நெட்வொர்க்' செயல்படுவது தெரியவந்துள்ளது. மேற்கு வங்கம், டெல்லி, கொச்சி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகள் வரை இந்த விற்பனை தொடர்பு நீண்டு உள்ளது.

மேட்டூரில் யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இதேபோல் மாநிலத்தில் சுமார் 15 மாவட்டங்களில் கள்ளச் சந்தை நடப்பது தெரியவந்துள்ளது. அதேபோல யானை தந்தங்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஆசிய யானைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்

அதில் பெரிய அளவிலான வேட்டையாடுதல், கடத்தலில் தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச அளவில் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. குறிப்பாக 2012-2019ஆம் ஆண்டு ஈரோடு கோட்டத்திற்குள்பட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தேனி கோட்டத்திற்குள்பட்ட மேகமலை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரிய அளவிலான தந்தங்கள் கடத்தல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சேலத்தில் யானை தந்தங்கள் பறிமுதல்

அதேவேளையில் மின்சாரம் தாக்கி அதிகளவில் யானைகள் இறந்துள்ளன. அது பற்றியும் விசாரணை நடத்தப்படும். தமிழ்நாட்டில் கடத்தல்காரர்களால் ஆசிய யானைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகளைக் காப்பாற்ற கள ஆய்வு, நுண்ணறிவுத் தகவல்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அவசரகாலப் பயன்பாட்டுக்கு 'சைகோவ்-டி' தடுப்பூசிக்கு அனுமதி

Last Updated : Aug 21, 2021, 12:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details